இலங்கைத் தமிழருக்கு அனைத்துலக தைரியமிக்க பெண்கள் விருது பெருமை சேர்க்கும் தருணம் இது !

இலங்கைத் தமிழரான ரனிதா ஞானராஜாவுக்கு அனைத்துலக தைரியமிக்க பெண்கள் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வழங்குகிறார்.இலங்கை அரசு விடுத்த சவால்கள், மிரட்டல்களை எதிர்த்துப் போராடி அந்நாட்டில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காக மனித உரிமை ஆர்வலருமான ரனிதா ஞானராஜா பாடுபட்டார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

“இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழுப்பி மாயமானவர்கள், வழக்கு விசாரணையின்றி பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நியாயம் கிடைக்க ரனிதா தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட ஆதரவை அவர் வழங்கினார்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

மனித உரிமை, மேம்பாடு மையத்தின் சட்டத்துறைத் தலைவராக இருக்கும் ரனிதா 2006ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மனித உரிமைக்காகப் போராடி வருகிறார்.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கு ஆதரவாக அவர் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.