பூட்டிய கதவுக்குள் சத்தமாய் பேச்சு..; பிரேமதாசாவின் மகன் தலைமையில் நடந்தது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ​ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, கோட்டையிலுள்ள கட்சி காரியாலத்தில் நடைபெற்றது.

அந்த செயற்குழுவில் பல்வேறான விடயங்கள் பேசப்பட்டாலும், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், வெளியிலிருந்து களமிறக்கப்படும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க மாட்​டோம்” என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​அதேபோல, சஜித் பிரேமதாஸாவை, எதிர்கால வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்குழுவின் போது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு பதவியொன்று வழங்கப்படுமென, முதலாவது செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை. அதேபோல, செயற்குழுவின் கூட்டத்துக்கும் பாட்டலி சமூகமளிக்கவில்லை என அறியமுடிகின்றது.

போயா தினத்தன்று நடத்தப்பட்ட தர்ம போதனையில், சஜித் உள்ளிட்ட பலரும் பங்குப்பற்றியிருந்தனர். அதன்பின்னர், புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான குமார் வெல்கம எம்.பி, ஐக்கிய மக்கள் சக்தியின் உப-தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கான நியமனக் கடிதமும் அன்றையதினம் வழங்கப்பட்டது.

அன்றிரவு கங்காராம நவம் பெரஹராவில், ஜனாதிபதி கோட்டாபய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பங்கேற்றிருந்தனர் எனினும், அங்கு எந்தவொரு அரசியல் வார்த்தையும் பேசப்படவில்லை, முத்தரப்பினரும் அரசியல் வார்த்தையை பேசாதிருந்து பொறுப்பாக இருந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்தவாரத்தின் இறுதியில், “வெல்​வோம்” எனும் தொனிப்பொருளில் கேகாலையில் நடைபெற்ற கூடத்தில், பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டனர். “வாழ்க்கை சுமை”. “நல்லாட்சியில் வழங்கப்பட்ட நிவாரணம்”, “சுதந்திரம்”, ஆகியவற்றை நினைவுகூர்ந்த மக்கள், ஜனநாயகத்தை மீளவும் நிலைநிறுத்துமாறு சஜித்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“ஆபிரிக்காவில் உண்மையை ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதனூடாக நாடு கட்டியெழுப்பப்பட்டது. எனினும், இந்த அரசாங்கம் முறைப்பாட்டாளரை பிரதிவாதியாக்கி, குற்றமிழைத்தவர்களை விடுவிக்கும் நோக்கில் ஆணைக்குழுவை நிறுவி, எதிர்க்கட்சியை அடக்குவதற்கு ஆடுகிறது” என சஜித் பிரேமதாஸ கூறியபோது, அங்கிருந்தவர்கள் ஆம், ஆம், அதுதான் உண்மையெனக் சத்தமாய் கூறியுள்ளனர்.

இதனிடையே மற்றுமொரு கூட்டத்தில், ரஞ்சன் ராமநாயக்க எம்.பி தொடர்பில் பேசப்பட்டது. “ரஞ்சனுக்கு தனியாக அறையொன்றை வழங்கி, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக, சிறைச்சாலை பிரதானிகள் உறுதியளித்திருந்த போதிலும், ​மேலிடத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், 11 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள்ளே ரஞ்சனையும் அடைத்துள்ளனர். மக்களுக்கு சேவையாற்றிய அவரை மலசலக்கூடங்களை கழுவ வைத்துள்ளனர்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இந்த வார அரசியலில், “ எங்களுடைய அரசாங்கமாக இருந்தால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையை வழங்குவோம், இதில் முதலாவது தொகுதியே வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை தொகுதிகள் இருக்கிறனவோ தெரியாது” என சஜித் பிரேமாதாஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கலந்து​ரையாடலில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, “ஜெனீவா போராட்டத்தில் நாடு என்றவகையில் வெற்றிக்கொள்வது முக்கியம். இந்தியாவையும் இல்லாமற் செய்துகொண்டுள்ளனர். ஆனால், ஜெனீவாவில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று எங்களுக்கு எதிரான யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அரசியல் கலந்துரையாடல்கள் அவ்வாறே சென்றுகொண்டிருந்த போது, “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை சுற்றிக்கொண்டு சிலரே இருக்கின்றனர். இன்னும் 100 வருடங்களின் பின்னராவது அவர் மரணிப்பது உறுதியாகும். அந்த சான்றிதழ் கிடைக்கும் வரையிலும் அவரை அந்த சிலர் சுற்றிக்கொண்டே இருப்பர், அவரோ தொடர்ச்சியாக தலைவராகவே இருப்பார்” என சஜித் பிரேமதாஸ கூறியபோது, அங்கிருந்தவர்கள் கெக்கென சிரித்துவிட்டனர்.