100 வயதாகியும் ஓய்வெடுக்காமல் விடாமுயற்சியுடன் உழைக்கும் பாட்டி!

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதற்கு பென்சில்வேனியாவைச் சேர்ந்த ரூத் ஷஸ்டர் என்பவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர் ஒரு மெக்டொனால்டு பாஸ்ட் புட் கடையில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு 100 வயது நிறைவு பெற்றது. இருப்பினும், தனது பணியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் தமக்கு இல்லை எனக்கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இதே வேலையில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி அன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.

triblive.com- ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, மெக்டொனால்டு நிறுவனம் 100 வயதை எட்டிய தங்களது விசுவாசமான ஊழியருக்காக ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ரூத் கடந்த 27 ஆண்டுகளாக மெக்டொனால்டு பிராண்டுடன் பணிபுரிந்து வருகிறார். மேலும் அன்றைய தினம் அவருக்கு பணிநாள் என்பதால் மெக்டொனால்டு சீருடையில் வேலை செய்தார். இந்த நிலையில் அவரது 100வது பிறந்தநாளை சிறப்பானதாக்க, பாஸ்ட் புட் நிறுவனம் வடக்கு ஹண்டிங்டனில் உள்ள பிக் மேக் அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வை அரகேற்றி ரூத்துக்கு “ஒரு நாள் ராணி” என்று முடிசூட்டியது.

மேலும் பட்டம் வழங்குவதற்கு முன்பு அவரது 100வது பிறந்தநாளை இசை நிகழ்ச்சியுடன் ஆடி கொண்டாடி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் அவரது 40 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார். தங்கள் விசுவாசமான ஊழியரின் பிறந்தநாளையொட்டி நிறுவனம் ரூத் ஷஸ்டர் பாபில்ஹெட் பொம்மையை அறிமுகப்படுத்தியது. அதேபோல மெக்டொனால்டு பிராண்டின் பல உயர் நிர்வாகிகளும் தங்கள் வாழ்த்துக்களை ரூத் பாட்டிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வை கண்டு நெகிழ்ச்சியடைந்த ரூத், தான் மிகவும் நன்றாக உணர்வதாகவும், வாழ்க்கையில் கிடைத்த எல்லாவற்றிற்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இப்போது ஓய்வு பெற விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, 100 வயதான பாட்டி, எந்த நேரத்திலும் தனது வேலையை விட்டு விலகப்போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார். உண்மையில், அவர் தனது வேலையை நேசிப்பதாகவும், அவருடைய பணியிடத்திற்கு எப்போதும் வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் ஓய்வு பெறப் போவதில்லை. நான் இங்கே இருப்பதையே விரும்புகிறேன். மக்கள் கடைக்கு வருவது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் நிறுவனத்தில் வேலை செய்வது நல்லது என்று கூறினார். மேலும், அவரது மகன் ஜாக் இது குறித்து பேசியதாவது, எனது தாயார் ஓய்வெடுப்பதை விட வேலை செய்வதையே விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தினார். ரூத்துக்கு ஐந்து பேரக் குழந்தைகளும், ஐந்து கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 6.5 மில்லியன் அமெரிக்கர்களில் 5.2 சதவிகிதத்தினரில் ரூத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவு 2016 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அமெரிக்க சமூக கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்டது.