கார் ரொம்ப பழசாயிடுச்சு…’ ‘புதுசா ஒண்ணு வாங்கணும்…’ ‘அப்படின்னு நினைக்குறவங்களுக்கு…’ – அட்டகாசமான ஆஃபர்-ஐ அறிவித்த அமைச்சர்…!

பழைய காரை கொடுத்து புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடியை வழங்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறையின் அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பழைய வாகனங்களை தாமாக முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையில், 20-ஆண்டுகளுக்கு மேலான சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், 15-ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை அகற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடியை வழங்க உள்ளது.

இந்த சலுகையை தவிர, இந்த புதிய வாகன கொள்கையில் நான்கு முக்கிய கூறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பசுமை வரி உள்பட பல வரி விதிப்புகளை மேற்கொள்ள அதில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாசுக் கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறை தானாக நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் தகுதி சான்றிதழ் வங்கும் மையங்களை அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் அரசு தனியாா் பங்களிப்பு (பிபிபி) முறையில் உருவாக்கப்படும்.

தானியங்கி சோதனைகளில் தோ்ச்சி பெறத் தவறும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதுடன் அவற்றை பறிமுதல் செய்யவும் புதிய வாகன கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.