முகத்தை மூடும் ஆடைகள் அணிவதை தடை செய்ய சட்டம்; முக்கிய நாடு அதிரடி முடிவு!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடந்துள்ளது.

இதில், புர்கா உட்பட முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை பொது இடங்களில் அணிவதை தடை செய்வதை சட்டரீதியாக அமல்படுத்த, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா தடை செய்யப்பட்டுள்ளது.

அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டது. இதில் 51%-க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து மக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சாலைகள், அலுவலகங்கள், உணவகங்கள், ரெயில்வே, விமான நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர கோவில்கள் உள்ளிட்ட பொதுவாக மக்கள் கூடும் புனித ஸ்தலங்களில் சுகாதார பாதுகாப்பு காரணமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியா கண்டத்திலேயே முதல் நாடாக பிரான்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவந்தது.