நூற்றுக் கணக்கான சிப்பாய்களை கொரோனா வைரஸிற்கு பலி கொடுத்து, தடுப்பு ஊசி வழங்காமல் விமானப் படையின் 70 வது பிறந்த தின கொண்டாட்டம்.

இலங்கை விமானப் படையின் பிரதான முகாம் அமைந்துள்ள கட்டுநாயக்க விமானப் படை முகாமில் உள்ள விமானப் படை சிப்பாய்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படவில்லை. நாளாந்தம் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் ,அது தொடர்பில் கவனத்தில் எடுக்காமல் விமானப் படையின் 70வது பிறந்த தினத்தை கொண்டாடி முடித்துள்ளது இலங்கை அரசு.

தற்போது கட்டுநாயக்க விமானப் படை முகாமில் சுமார் 4,000 வரையான விமானப் படை சிப்பாய்கள் உள்ளனர். திருமணமான சிலரது குடும்பங்களும் அங்கு கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முகாம் நபர்களில் 10% சிப்பாய்கள் அதாவது 400 பேர் வரை தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இதில் பலர் இறந்துள்ளார்கள். இந்த விடையங்களை தளபதிகள் மறைத்தும் விட்டார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் வேறு விமானப் படை முகாம்களில் இருந்தும் சிப்பாய்களை அழைத்து வந்து சுமார் 900 சிப்பாய்களின் பங்கு பற்றுதலில், பாரிய ஆயுத வேடிக்கை பேரணி ஒன்றை கடந்த 4ம் திகதி முதல் 5ம் திகதி வரை நடத்தியுள்ளார் கட்டளை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ. இதன் காரணமாக தற்போது இந்த முகாமில் நாள் ஒன்றுக்கு 5 தொடக்கம் 7 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகிறார்கள். எந்த சிப்பாய்க்கு கொரோனா தொற்றினால் என்ன ? விமானப்படையின் 70வது பிறந்த நாளை கொண்டாடியே தீரவேண்டும் என்பது தான் சிங்களத்தின் நோக்கமாக உள்ளது.