சிறைக்குள் ரஞ்ஜனுடன் ‘செல்பி’ எடுத்து சிக்கலில் சிக்கிக்கொண்டார் அண்ணாச்சி!

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ‘செல்பி’ எடுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்ஜன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு நேற்றையதினம் சென்றுள்ளார்.

இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் ‘செல்பி’எடுத்து, தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு, கையடக்கத் தொலைபேசியை உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தமை மற்றும் ‘செல்பி’ எடுக்க அனுமதித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருண எம்.பி. ராமநாயக்கவுடன் செல்பி எடுத்து தனது நாடாளுமன்ற சலுகைகளை மீறியதாகஅமைச்சர் ரத்வத்த தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா மீது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் முறைப்பாடு செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.