லெபனானில் வெடித்தது மக்கள் புரட்சி; இலங்கையிலும் இப்படி நடக்கும்!

லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டுக்குச் செல்லும் மூன்று முக்கிய சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். சாலைகளின் நடுவே டயர்களை கொளுத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெய்ரூட்டில், எதிர்ப்பாளர்கள் மத்திய வங்கியின் முன் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசு எதுவும் செய்ய முன்வராவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்று வரும் நிலையில், பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

2019-ல் ஆரம்பித்த லெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களின் சேமிப்புகளை அழித்துவிட்டது. நுகர்வோர் வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது.

பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. நாட்டின் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டாலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பு 10,000 ஆக வீழ்ச்சியடைந்தது. இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நிலையில், பண மதிப்பு இந்த அளவிற்கு குறைந்துபோனதால், எதிர்ப்பாளர்கள் தினமும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.