ஒன்றும் சொல்வதற்கு இல்லை’ ஹாரி- மேகன் மார்கல் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து பிரதமர் மறுப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.எனினும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்து வந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் இருக்கும் நிலையில், மேகன் 2-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.‌

இதனிடையே ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணம் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் ஆளுக்கொரு காரணத்தை கூறி பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும், விளக்கத்தையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகனும் மவுனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினர்.

அதில் இருவரும் அரச குடும்பத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சசையை கிளப்பியுள்ளது.இந்நிலையில், ஒரு கொரோனா வைரஸ் செய்தி பற்றிய மாநாட்டில் இதுகுறித்து கேள்விகேட்டபோது பதிலளித்த இங்கிலாது பிரதமர் போரிஸ் ஜான்சன், எப்போதுமே மகாராணியின் மீது மிகுந்த அபிமானத்தை கொண்டிருப்பதாகவும், இங்கிலாதிலும் காமன்வெல்த் முழுவதிலும் அவர் ஒரு ஒன்றிணைக்கும் பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.ஆனால், அரச குடும்பத்துடன் தொடர்புடைய விஷயங்கள் என்று வரும்போது ஒரு பிரதமராக தனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.