என்னங்க சொல்றீங்க..!’.. இப்படி ஒரு OFFER-அ.. முண்டியடித்து ஹோட்டலில் குவிந்த மக்கள்..!

ஹோட்டல் ஒன்றில் 1 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கலில் ‘உப்புக்கறி’ என்ற புதிய ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு சீரக சம்பா சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என இந்த ஹோட்டல் நிர்வாகம் போஸ்டர் ஒட்டியுள்ளது. மேலும் இந்த ஆஃபர் பெண்களுக்கு மட்டும்தான் என தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பிரியாணி வாங்குவதற்காக நேற்று இந்த ஹோட்டலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

பெண்களுக்கு மட்டும்தான் என தெரிவிக்கப்பட்டதால், வீட்டில் உள்ள தங்களது பெண் குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு ஆண்கள் பலர் பிரியாணி வாங்க வந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது.

இதுகுறித்து தெரிவித்த ஹோட்டல் உரிமையாளர், ‘6 மாசத்துக்கு முன்னாடி தான் இந்த ஹோட்டலை நாங்க ஆரம்பிச்சோம். உழைக்கும் பெண்களை மகிழ்விக்கும் விதமாக பிரியாணி கொடுப்பது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது’ என தெரிவித்தார். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும் என அறிவித்திருந்ததால், மக்கள் முண்டியத்துக்கொண்டு பிரியாணி வாங்க வந்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.