பும்ரா’ குறித்து ‘சஞ்சனா’ பகிர்ந்திருந்த பழைய ‘டீவீட்’… ‘கல்யாண’ பேச்சுக்கு நடுவுல.. இப்போ இந்த பதிவும் செம ‘வைரல்’!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah). இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, சொந்த காரணங்களுக்காக தான் தொடரில் இருந்து விலகுவதாக பும்ரா பிசிசியிடம் கூறியிருந்தார்.

மேலும், நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ள டி 20 தொடரில் இருந்தும் பும்ரா விலகியுள்ளார். இந்நிலையில், பும்ராவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும், அதனால் தான் அவர் தொடரில் இருந்து விலகினார் என்றும் தகவல்கள் வெளியானது. அது மட்டுமில்லாமல், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை திருமணம் செய்யவுள்ளார் என வதந்தி பரவியது.

ஆனால், அதில் உண்மையில்லை என அனுபமாவின் தாயார் மறுத்து விட்டார். இதனையடுத்து, முன்னாள் மாடலும், விளையாட்டு தொலைக்காட்சியின் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் (Sanjana Ganesan) என்பவரை வரும் 14 ஆம் தேதியன்று திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக, இணையதளம் மூலம் இந்த தகவல்கள் வலம் வரும் நிலையில், இது பற்றி எந்த அதிகாரபூர்வ தகவலும் இருவரின் தரப்பில் இருந்து வெளிவரவில்லை.

இதனிடையே, பும்ரா குறித்து சஞ்சனா கணேசன் சில மாதங்களுக்கு முன்பு செய்திருந்த ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, பயிற்சி ஆட்டத்தில் பும்ரா அரை சதமடித்திருந்தார். அவரின் முதலாவது முதல் தர போட்டி அரை சதமாக இது பதிவான நிலையில், அது பற்றிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சஞ்சனா கணேசன், பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

அதே போல, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, பும்ராவின் சில புகைப்படங்களை இஎஸ்பிஎன் க்ரிக்இன்போ (ESPN Cricinfo) ட்விட்டர் பக்கம் வெளியிட்டிருந்த நிலையில், அதனைப் பகிர்ந்த சஞ்சனா கணேசன், ‘ஜஸ்பிரிட் பும்ராவின் களத்தில் இருக்கும் போதுள்ள மனநிலை, எனது அன்றாட மனநிலையுடன் ஒத்துப் போகிற ஒன்றாகும்’ என குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த ட்வீட்களை தோண்டி எடுத்த நெட்டிசன்கள், தற்போது அதனை அதிகம் வைரலாக்கி வருகின்றனர். இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், விரைவில் பும்ரா திருமணம் குறித்து அவர்களது தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.