மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்? சீமான் விளக்கம்!

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் முதல் ஆளாக கடந்த மார்ச் 7-ம் தேதி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று முன்பே தெரிவித்திருந்த சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களம் காண இருப்பதாக அறிவித்ததை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் தான் ஏன் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவில்லை என்றும், திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்தது ஏன் என்றும் தற்போது சீமான் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய கட்சி தொண்டர்கள் தான் நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட காரணம். எண்ணூரில் வரவிருக்கும் அதானியுடைய துறைமுக விரிவாக்க திட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்போதே அப்பகுதி மக்கள் வாழ்விடமாக இல்லை. அங்கிருக்கும் மீனவ குடிகளை வெளியேற்றியிருக்கிறார்கள். 6111 ஏக்கரில் புதிதாக ஒன்றையும் தொடங்க முடியாது ஆனால் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று அதானியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

எனக்கு ஓட்டைக் கேட்பதை விட நாட்டைக் காப்பது தான் எனக்கு முதன்மையானது. அந்த பிரச்னையை மக்களுடன் களத்தில் நின்று பேசி தெளிவுபடுத்தவே அந்த தொகுதியை தேர்வு செய்திருக்கிறேன். நான் நினைத்தால் காரைக்குடியில் போட்டிட்டிருப்பேன். அங்கு பாஜக, காங்கிரஸ் போட்டியிடும் அவர்களை எதிர்த்து நின்றால் இந்த மண்ணின் மைந்தனாக நான் தான் வெற்றி பெற்றிருப்பேன்.” என்று கூறியுள்ளார்.