பொது இடங்களில் அரைக்கால் சட்டை, ஜீன்ஸ், ஸ்கர்ட் அணிய தடை: கட்டுக்கோப்பான கிராமம்!

பொது இடங்களில் அரைக்கால் சட்டை, ஜீன்ஸ், ஸ்கர்ட் போன்றவற்றை இளைஞர்கள் அணியக்கூடாது என்று உத்தரப்பிரதேச பஞ்சாயத்து ஒன்று தடை விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முசாப்ஃர்நகர் மாவட்டத்தில் உள்ள சரத்தவல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிபல்ஷா எனும் கிராமத்தில் ராஜ்புத் வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ள நிலையில் கிராம சபை கூட்டம் சமீபத்தில் அங்கு நடைபெற்றது. அதில் கிராமத்து முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் குறிப்பிட்ட ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு தடை விதித்துள்ளனர். அதன்படி ஆண்கள் அரைகால் சட்டையும், பெண்கள் ஜீன்ஸ், ஸ்கர்ட் போன்றவற்றையும் பொது இடங்களில் அணியக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்துக்களில் ஒதுக்கீட்டின் முறையில் தேர்தல் நடத்துவதற்கு இக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நெருங்குவதால் கிராமங்கள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்தில் கூட்டத்தை நடத்திய தாகூர் பூரான் சிங் கூறுகையில், எந்த நாட்டின், சமூகத்தின் கலாச்சாரம் சீரழிகிறதோ, அந்த நாடும், சமூகமும் தானாகவே அழிந்துவிடும். துப்பாக்கி, தோட்டாவெல்லாம் தேவையில்லை. எனவே பொறுப்பான கிராமத்தினராக யாரும் தேர்தல் நேரத்தில் மதுபானங்களை உட்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

2வது பிரச்னை என்பது நவநாகரீக ஆண்கள் கிராமத்தில் அரைக்கால் சட்டையும் வலம் வருகின்றனர். இந்த நேரம் முதல் யாராவது அரைக்கால் சட்டையுடன் பவனி வந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் சமூக புறக்கணிப்புக்கும் ஆளாவார்கள். 3வது பெண்கள் ஜீன்ஸ் அல்லது ஆட்சேபிக்கத்தக்க ஆடைகள் அணிவது. இது சமுதாயத்திற்கு நல்லதல்ல . நான் அனைவரும் ஒன்றிணைந்து இதனை தடை செய்ய வேண்டும். இந்திய கலாச்சாரத்திற்கு உகந்த ஆடைகளை அணியுங்கள். இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முசாப்ஃர்நகர் மாவட்டத்தில் உள்ள காப் எனும் கிராம பஞ்சாயத்தில் ஆண்கள் அரைக்கால் சட்டைகளுடன் பொதுவெளியில் நடமாடக்கூடாது என தடை போடப்பட்டது நினைவுகூறத்தக்கது.