பெண்கள் தொடர்பில் WHO வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் 3 பெண்களில் ஒருவர் தங்களது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் உலகளவில் சுமார் 736 மில்லியன் பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் பெண்களுக்கு எதிரான வன்முறை பரவுவது குறித்த WHO-வின் மிகப்பெரிய ஆய்வின் தரவை அடிப்படையாக கொண்டவை. மேலும் அந்த அறிக்கையானது உலகளவில் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட நான்கு பெண்களில் ஒருவர் (25%)அதாவது சுமார் 641 மில்லியன் பெண்கள் தங்களது இருபது வயதின் நடுப்பகுதியை எட்டும் நேரத்தில் தங்களது நெருங்கிய இணையால் ஏற்கனவே பாலியல் அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோக அனுபவத்தை பெற்றுள்ளார்கள் என்றும் கூறி உள்ளது.

பெண்களுக்கு எதிரான ஆண்களின் இந்த பரவலான வன்முறை மாறாமல் தொடர்கிறது என்பது மட்டுமல்லாமல், நெருங்கியவர்களால் நிகழ்த்தப்படும் உடல் மற்றும் பாலியல் பாலியல் ரீதியான வன்முறை என்பது பெண்கள் அனுபவிக்கும் பொதுவான விஷயமாக உள்ளது. சர்வதேச அளவில் 85 கோடியே 20 லட்சம் பெண்கள் தங்களது 15 வயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் உலகளவில்பிஜி, பப்புவா நியூ கினியா, வங்கதேசம், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழ்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழ்மையான நாடுகளில் வாழும் சுமார் 37% பெண்கள் தங்கள் வாழ்நாளில் நெருங்கிய இணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிஜி, தெற்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்கா போன்ற பெருங்கடல் தீவுகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் உடல் / பாலியல் வன்முறையை இணையால் அனுபவித்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. 2010-ம் ஆண்டு முதல் கடந்த 2018 வரையிலான காலகட்டத்தில் இல்லாத அளவிற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த காலகட்டத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 15 முதல் 49 வயதுடைய பெண்கள் அதிகளவு தங்கள் இணையால் வன்முறை ஆளாகியுள்ளனர்.

Also read… Explainer: இனிக்காத இல்லற வாழ்வு – பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து முறை சிறந்த தீர்வு தருமா?

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள பெண்கள் தன இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. மகளிர் நிர்வாக இயக்குநர் பும்சிலே பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை இன்று நம் உலகில் மிகவும் பரவலான, தொடர்ச்சியான மற்றும் பேரழிவு தரும் மனித உரிமை மீறல்களில் ஒன்று என சாடியுள்ளார்.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய சிவில் சமூக அமைப்புகளுடன் கூட்டுசேருமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு WHO அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது. பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை ஒழிக்க உலக நாடுகளிடமிருந்து புதிய உறுதிப்பாடு மற்றும் கொள்கைகளை காண விரும்புகிறோம். 2030-க்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க உலக நாடுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.