ஃபேஸ்புக்கில் போடப்பட்ட ஒரு ஸ்டேட்டஸ்…’ உண்மை என நம்பி எல்லாரும் ‘அத’ பண்ணிருக்காங்க…! ‘ஒருத்தருக்கு மட்டும் வந்த டவுட்…’ – நூதன மோசடி…!

கர்நாடக மாநிலத்தில் டி.ஜி.பியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சங்கர் பிதரி. பணியில் இருந்த போது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையின் தலைவராக செயல்பட்டத‌ன் மூலம் சங்கர் பிதரி கர்நாடகா முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் சங்கர் பிதரியின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து, அதன் வாயிலாகப் போலி முகநூல் கணக்கு ஒன்றைத் தொடங்கினர். பிறகு, ’ரொம்ப அவசரம், உடனே பணம் தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவுங்கள்’ என்று சங்கர் பிதரியின் பேஸ்புக்கில் இருந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலருக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

இதை உண்மை என நம்பிய சங்கர் பிதரியின் நண்பர்களும் உறவினர்களும் அந்த வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால், ஒருவர் மட்டும் சந்தேகம் கொண்டு சங்கர் பிதரியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

பிறகு தான் சங்கர் பிதரியின் பெயரில் மோசடி நடப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசர் மேற்கொண்ட வழக்கு விசாரணையில், நாகாலாந்தைச் சேர்ந்த தியா என்னும் ரூகா ( 37 ), செரோபா ( 27 ) , ஈஸ்டர் கோன்யாக் ( 27 ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களிடமிருந்து 4 செல்போன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் வாங்கப்பட்ட 13 பான் கார்டு, 6 ஆதார் கார்டு, 2 ஏடிஎம் கார்டு, 20-க்கும் மேற்பட்ட வங்கி ஆவணங்கள் மற்றும் ரூ. 2 லட்சம் பணம் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சங்கர் பிதரியின் மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து, ஹேக் செய்து, அதன் மூலம் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கைதான மூன்று பேர் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.