இது என்னோட பொண்ணு’… ‘அவ வயித்துல ஒரு தீ காயம் இருக்கும் பாருங்க’… ‘கண்ணீரோடு சொன்ன 71 வயது பாட்டி’… நடந்தது என்ன?

சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறிச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணான கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ வழி தவறி பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். 9 வயது சிறுமியாக லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்த கீதாவைப் பாகிஸ்தானில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்துக் கொண்டது.

கீதா அங்கேயே வளர்ந்த நிலையில், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு கீதா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை ‘இந்தியாவின் மகள்’ என வர்ணித்த சுஷ்மா சுவாராஜ், அவரது குடும்பத்தைக் கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

ஆரம்பக் காலத்தில் அவர் இந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். மேலும் அவர் கடந்த 5 ஆண்டுகளாகப் பெற்றோரைத் தேடிவந்தார். இதற்காக அவர் உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று இருந்தார். இதேபோல பலர் கீதாவை தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் என உரிமை கோரினர்.

ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மனம் தளராமல் கீதா தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பெற்றோரைத் தேடிவந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பெற்றோரைத் தேடி மராட்டிய மாநிலம் பர்பானிக்கு வந்தார். அப்போது பர்பானி மாவட்டம் ஜின்துரை சேர்ந்த மீனா வாக்மாரே (வயது71) என்ற மூதாட்டி கீதாவைத் தனது மகள் என உரிமை கோரினார்.

மேலும் அவர் கீதாவை முதல் முறையாகப் பார்த்த போது ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மூதாட்டி கீதாவின் பெயர் ராதா எனவும் தெரிவித்தார். அதோடு மூதாட்டி கீதாவின் வயிற்றில் ஒரு தீக்காய தழும்பு இருக்கும் எனத் தன்னார்வ அமைப்பினரிடம் கூறியுள்ளார். தன்னார்வ அமைப்பினர் சோதனை செய்த போது மூதாட்டி சொல்லியது சரியாக இருந்தது.

இதையடுத்து கீதா பல கட்ட போராட்டத்திற்குப் பின்னர் தனது தாயைக் கண்டுபிடித்து விட்டார் என்றே கூறப்பட்டுள்ளது. இருப்பினும் “மீனா வாக்மாரே தான் கீதாவின் தாய் என்பதை உறுதிப்படுத்த எப்போது டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவரை கீதா தன்னார்வ அமைப்பில் பயிற்சி பெற்றுக் கொண்டு இருப்பார்” எனத் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கீதா அவரது உண்மையான தாயுடன் இணைந்துவிட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் மகிழ்ச்சியாகச் செய்தி வெளியிட்டுள்ளது.