நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன்னா…’ ‘அதுக்கு காரணம் மனைவி தான்…’ ‘மனைவிகளோட தியாகத்த நெறைய கேள்விபட்டிருப்போம்…’ – இத வெறும் ‘தியாகம்’னு மட்டும் சொல்லிட முடியாது…!

மகாராஷ்டிராவில் தான் கணவருக்கு கல்லீரல் தானம் செய்வதற்கு தன் உடல் எடையை குறைக்க மனைவி எடுத்த செயல்கள் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மதுபானக்கடை நடத்தி வரும் விவேக் ஜெயின். 51 வயதான இவர் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். அளவிற்கு அதிகமாக குடிக்கவே அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கல்லீரல் தானம் செய்ய எவரும் இல்லாத சூழலில் விவேக் ஜெயினின் மனைவி நீது ஜெயினே தன் கணவருக்கு கல்லிரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். இருவரும் ஒரே ரத்த வகை சேர்ந்தவர்கள் என்பதால் மருத்துவர்களும் இவர்களின் முடிவுக்கு அனுமதித்துள்ளனர். ஆனால் இதிலும் ஒரு பிரச்னை இருந்ததுள்ளது.

அதாவது நீது தன் வயதிற்கு அதிகமான அளவில் 97 கிலோ எடையுடன் இருப்பதால் எடையை குறைத்தால் மட்டுமே ஆப்பரேஷன் செய்ய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் விவேக் ஜெயின் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நீது, தன் எடை குறைப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். தன் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மருத்துவமனையின் 12-வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கியுள்ளார்.

மேலும் தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார். இதன்காரணமாக சில நாட்களிலேயே 10 கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளார் நீது.

அதையடுத்து அறுவை சிகிச்சை செய்து, அவரின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவர் கணவருக்கு வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய விவேக் ஜெயின், ‘நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு என் மனைவிதான் முழுக்கக் காரணம். இது எனக்கு மறு பிறவி. மதுவை விடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.