அடித்து நொறுக்கப்பட்ட விசிக பிரமுகரின் கார்.. அம்பலமான பின்னணி!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் 39 வயதான அம்பேத்கர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். வியாழன் அதிகாலை 5 மணியளவில், வண்டிப்பேட்டை அருகே காரில் சென்றபோது 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வழிமறித்து காரை பெரிய பெரிய கற்களால் தாக்கி கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கினர். தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிய நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் போலீசாரிடம் அம்பேத்கர் புகாரளித்தார்.

போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் நடந்தது. புதன்கிழமை மாலை முதல் அம்பேத்கர் முழு மதுபோதையில் இருந்துள்ளார். நள்ளரவிலும் அதிகளவில் மது அருந்திய அவர், போதையில் கார் ஓட்டிக் கொண்டு நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்துள்ளார். வண்டிப்பேட்டை அருகே கார்த்திக் மற்றும் பிரபு என்ற இரண்டு இளைஞர்கள் சாலையோரம் பாலத்தின் திண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு காரை நிறுத்தி அம்பேத்கர், அவர்களைப் பார்த்து நள்ளிரவிலும் ஏன் திரிந்து கொண்டிருக்கிறீர்கள்? வீடு செல்லுங்கள் என சத்தம் போட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் நீங்கள் யார்? எனக் கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் அந்த இளைஞர்களை ஆபாசமாக திட்டிய அம்பேத்கர் அவர்களைத் தாக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வந்து அம்பேத்கரின் காரை கற்களால் தாக்கி உடைத்து நொறுக்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அம்பேத்கர் மீதும் தாக்கியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தபோலீசார், 28 வயதான கார்த்திக் , 27 வயதான பிரபு, 28 வயதான சோமசுந்தரம் மற்றும் 26 வயதான அஜித் மற்றும் அம்பேத்கர் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.