லடாக் நிலவரம்: படைகள் விலகியது… திடீரென நடந்தது என்ன?

லடாக் மோதலை தொடர்ந்து அங்கு இந்தியாவும், சீனாவும் பெருமளவில் படைகளை குவித்திருந்தன. இது தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பலனாக அங்கிருந்து படைகள் விலக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இருநாட்டு எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு நெறிமுறைக்குழு கூட்டம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிழக்கு ஆசியாவுக்கான கூடுதல் செயலாளர் தலைமையிலான குழுவினரும், சீனா தரப்பில் அந்தநாட்டு வெளியுறவுத்துறையின் எல்லை மற்றும் பெருங்கடல் துறைக்கான இயக்குனர் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், லடாக்கில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நிலவும் பிரச்சினைகள் மற்றும் மேற்கு பிராந்திய அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு நிலவரம் குறித்து இரு பிரிவினரும் விரிவாக ஆலோசனை மற்றும் ஆய்வு செய்தனர்.

லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் படைகளை விலக்கியது ஒரு சிறந்த நடவடிக்கை என ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளை தொடர்வது எனவும், நெருங்கிய தகவல் தொடர்பு பரிமாற்றங்களை மேற்கொள்வது எனவும் முடிவு செய்தனர்.