2024 ஜனாதிபதி தேர்தலில் பசில் வேட்பாளர்; மன்னர் ஆட்சி தொடரப்போகுது!

2024 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சான் பிரதீப் தெரிவித்தார்.

கட்சியின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தனித்து ஆட்சியமைக்கும் என கூறினார்.

மாறுப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அரசியல் மட்டத்தில் அவ்வாறு பேசப்படுவதாக தெரிவித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என குறிப்பிட்ட சான் பிரதீப், ஒருவேளை அவர் மறுப்பு தெரிவித்தால் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என குறிப்பிட்டார்.

மேலும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒரு சிலர் அவருக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை முன்வைக்கிறார்கள் என்றும் சான் பிரதீப் குற்றம் சாட்டினார்.

சேறுப்பூசுவதால் பொதுஜன பெரமுனவின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்ட சான் பிரதீப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தனித்து ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.