ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி எடுத்துள்ள அதிரடி முடிவு!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பின் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளில் கன்னியாகுமரி தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் சுயேட்சியாக போட்டியிடுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததால் அதிருப்தியில் இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் ரஜினி மக்கள் மன்றம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த முடிவை அவரது தீவிர ரசிகர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றாலும் ஒரு சிலர் இந்த முடிவை ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு அரசியல் பணியாற்றி வருகின்றனர்.