ஊரே சிரிக்குது: அவமானம் தாங்காமல் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்

தனுஷ் தான் நடிக்க வந்த புதிதில் காருக்குள் தேம்பித் தேம்பி அழுததாக விஜய் சேதுபதி, அனிருத், சதீஷ் ஆகியோரிடம் தெரிவித்த பழைய வீடியோ பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்தே பழைய விஷயங்களை அசைபோடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தான் தனுஷின் பழைய வீடியோ ஒன்று பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

அந்த வீடியோவில் தனுஷ், விஜய் சேதுபதி, அனிருத், சதீஷ் ஆகியோர் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி, அனிருத், சதீஷிடம் தனுஷ் கூறியதாவது,

என்னை கலாய்க்காதவர்களே இல்லை. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒருவர் என்னிடம் வந்து யார் ஹீரோ என்று கேட்டார். காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது நடந்தது. நான் டிராலி பக்கத்தில் உட்கார்ந்திருந்தபோது யார் ஹீரோ என்று கேட்டார்.
நானோ செகண்ட் ஹீரோ சுதீப்பை கை காட்டி அவர் தான் ஹீரோ என்றேன். அந்த நபரும் சுதீப்பிடம் சென்று கை கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அந்த ஆள் கூட்டத்தில் நின்றபோது வேறு ஒருவர் உதவி இயக்குநரை பார்த்து யார் ஹீரோ என்று கேட்டிருக்கிறார். அதற்கு உதவி இயக்குநர் என்னை கைகாட்டி அவர் தான் ஹீரோ என்றார்.

அதற்கு அருகில் இருந்த நபரோ என்னப்பா அவரை போய் ஹீரோனு சொல்றீங்க. சுதீப் தான் ஹீரோ, இதை அவரே சொன்னார் என்றார். நான் தான் ஹீரோ என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது. இதையடுத்து மொத்த கிரவுடும் சிரித்தார்கள். அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். ஹே இவரு ஹீரோவா, அந்த ஆட்டோக்காரன் ஹீரோபா, ரிக்ஷாக்காரன் ஹீரோபா என்று தெலுங்கில் கூறி சிரித்தார்கள்.

அப்பொழுது நான் சின்னப் பையன், 17 வயசோ 18 வயசோ தான். இதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பக்குவம் கிடையாது. காரில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். நான் கல்லூரிக்கு போக ஆசைப்பட்டேன். அப்பா தான் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அதனால் என் அப்பா மீது செம கோபம் வந்தது. இப்படி எல்லாம் என்னை அவமானப்பட வைக்கிறாரே என்று அப்பா மீது பயங்கர கோபம். உருவத்தை வைத்து என்னை இன்றும் கூட கலாய்க்கிறார்கள் என்றார்.