இங்கிலாந்தில் பெண் கடத்தி, படுகொலை; கொரோனா பரவலுக்கு இடையே நினைவிடத்தில் குவிந்த மக்கள்!

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் சாரா எவரார்டு (வயது 33). கடந்த 3ந்தேதி தெற்கு லண்டனில் கிளாபம் பகுதியில் காணாமல் போனார்.

அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டதில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் கிளாபம் காமன் பகுதியில் மக்கள் அமைதியாக திரண்டு சாராவின் நினைவாக மலரஞ்சலி செலுத்தி சென்றனர்.

இதேபோன்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் இளவரசி மற்றும் இளவரசர் வில்லியம்சின் மனைவியான கேத் மிடில்டனும் நினைவிடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த சம்பவத்தில், வெய்ன் காவுஜென்ஸ் என்ற போலீசார் சாராவை கடத்தி படுகொலை செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றவாதிகள், சமூக தலைவர்கள் மற்றும் லண்டன் குடியிருப்புவாசிகள் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இதன்பின்னர், சாரா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்த தொடங்கினர். கொரோனா பரவும் சூழலில் இது ஏற்புடையதல்ல என நீதிமன்றம் எச்சரித்தது. போலீசாரும் மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தி கேட்டு கொண்டனர்.

எனினும் சாராவின் படுகொலை நாடு முழுவதும் தேசிய அளவில் பரபரப்புடன் பேசப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் எத்தனை பேர் போன்ற கோஷங்களை கூட்டத்தினர் எழுப்பியபடி சென்றனர்.