20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 2½ கிலோ யுரேனியம் அயல் நாட்டில் சிக்கியது!

செறிவூட்டப்படாத யுரேனியம்
நேபாள தலைநகர் காட்மாண்டுவின் பவுதா பகுதியில் செறிவூட்டப்படாத யுரேனியத்தை (யுரேனியம் 238) சிலர் விற்க முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.அப்போது அங்கே 2½ கிலோ செறிவூட்டப்படாத யுரேனியம் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அதை கைப்பற்றிய போலீசார், அந்த யுரேனியத்தை மறைத்து வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தியாவில் இருந்து கிடைத்தது
அதில் அந்த யுரேனியம் இந்தியாவில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி செல்லப்பட்டதாக இருக்கலாம் என தெரியவந்தது. அதாவது யுரேனியத்தை வைத்திருந்த அந்த பெண், தனது மாமனார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள யுரேனியம் சுரங்கங்களில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது இதை அவர் இந்தியாவில் இருந்து கொண்டு வந்ததாகவும் கூறினார்.தற்போது 86 வயதாகும் அவரது மாமனார் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அந்த யுரேனியம் அந்த பெண்ணின் வீட்டிலேயே இருந்தது. ஆனால் அதன் மதிப்பு அவருக்கு தெரியவில்லை.

விற்க முயன்றபோது சிக்கினர்
ஆனால் தங்களிடம் இருக்கும் அந்த பொருள் விலையுயர்ந்தது என்பதை தெரிந்து கொண்ட அந்த பெண், வேறு சிலருடன் சேர்ந்து அதை விற்க முயற்சித்துள்ளார். அப்போதுதான் போலீசார் அறிந்து அவரது வீட்டை சோதனையிட்டு யுரேனியத்தை கைப்பற்றி உள்ளனர்.அந்த யுரேனியத்தை தற்போது நேபாள அறிவியல் அகாடமிக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆய்வு செய்த பின்னரே அது யுரேனியம்-238 என்பதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

முதல் சம்பவம்
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் வாலிபர்கள் எனவும், அந்த பெண் உள்பட மேலும் இருவர் 40 வயதை கடந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். நேபாளத்தில் யுரேனியம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இது என போலீசார் தெரிவித்தனர்.இயற்கையாகவே கதிரியக்க தன்மை கொண்ட யுரேனியத்தை செறிவூட்டினால் அதை அணு ஆயுதங்கள் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.