ஏரி ஆக்கிரமிப்பு மீட்புக்காக தந்தை, அண்ணன் படுகொலை – தேர்தல் களத்திற்கு வந்த சிங்கப்பெண்!

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சட்டரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்ததால் படுகொலை செய்யப்பட்டவரின் மகள் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்பதற்காக சட்டரீதியிலும் பல்வேறு போராட்டங்களையும் அதே பகுதியைச் சேர்ந்த வீரமலையும் அவருடைய மகன் நல்லத்தம்பியும் முன்னெடுத்தனர். அவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெற்றியும் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வீரமலையும் அவருடைய மகன் நல்லதம்பியும் அவர்களது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தகொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வீரமலையின் மகள் அன்னலட்சுமி தந்தையின் பாதையில் ஏரி ஆக்கிரமிப்புகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்ட பிறகும் அந்த ஏரியின் 200 ஏக்கர் அளிவிலான அக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

இதற்கு மத்தியில் அன்னலட்சுமி வரும் சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் அநீதிகளை கண்டு பெண்கள் அச்சப்பட கூடாது என்றும் அதற்கு நான் முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் தன்னுடைய ஊதியத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பணத்தை மக்களுக்காகவே செலவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.