மம்தாவின் அரசியல் நாடகம் அம்பலமானது; உண்மை இதோ!

மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இதற்கிடையில், இத்தேர்தலில் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மேதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி காரில் ஏற்றி சென்றனர்.
பின்பு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

பிரசாரத்தின்போது மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், அந்த அறிக்கையில் முழுமையான தகவல்கள் இல்லை என்றும் விரிவான அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் துபே மற்றும் பொது பார்வையாளர் அஜய்நாயக் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது.

இந்த 2 தேர்தல் பார்வையாளர்களும் மம்தா பானர்ஜி தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களை இருவரும் கடந்த சனிக்கிழமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மம்தா பானர்ஜி மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் ஒரு விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும், விபத்து நடைபெற்ற அன்று நந்திகிராமில் பிரசார நிகழ்ச்சி நடத்த தேர்தல் ஆணைய விதிகளின் கீழ் எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

ஆகையால், தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ விடீயோ பதிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளுக்காக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

தேர்தல் பார்வையாளர்களின் இந்த அறிக்கை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.