விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை; தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 20 சீட்டுகளை எதிர்ப்பார்த்தது. ஆனால் அதிமுக தலைமையோ அதற்கு உடன்படவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை தரவில்லையென்றால் தனித்துப்போட்டி என எச்சரிக்கை விடுத்தது தேமுதிக, அதிமுகவுடனான பேச்சுவார்த்தையின் போதே நமது சின்னம் முரசு, நமது முதல்வர் விஜயகாந்த் என ட்வீட் செய்தார் சுதிஷ். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தே.மு.தி.க கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதனையடுத்து, அ.ம.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தே.மு.தி.க. இரண்டு கட்சிகளிடையே இழுபறி நீடித்துவந்த நிலையில், இன்று அமமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை திரும்பப்பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி, திருத்தனி, ஆவடி, திருவிகநகர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், செய்யூர், மதுராந்தம், கே.வி.குப்பம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.