முதல்வரிடம் கண்கலங்கிய பெண் எம்.எல்.ஏ. : எடப்பாடி பழனிச்சாமி சொன்ன அந்த வார்த்தை!

சிட்டிங் எம்.எல்.ஏ-வான தனக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டது குறித்து திருச்சியில் முதல்வரிடம் பெண் எம்.எல்.ஏ. கண்ணீர் மல்க முறையிட்டார். அவருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் ப.குமார், வெல்லமண்டி நடராஜன், இந்திரா காந்தி, பத்மநாபன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் திருச்சி விமான நிலையத்தில் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பரமேஸ்வரி முருகனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சரான பரஞ்சோதிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரான வளர்மதிக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளித்த பரமேஸ்வரி முருகன், சிட்டிங் எம்.எல்.ஏ.வான தனக்கு இந்த தேர்தலில் சீட்டு வழங்காதது குறித்து கண்ணீருடன் முறையிட்டார். அப்போது முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தார்.

இது குறித்து பேசிய பரமேஸ்வரி முருகன், தனக்கு சீட் தந்தாலும், தராவிட்டாலும் முதல்வருக்கு நான் விசுவாசமாக இருப்பேன்” என்றார்.