அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருள் சிக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்; பொலிஸ் அதிகாரி கைது!

கார் உரிமையாளர் மரணம்

தென்மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த மாதம் 25-ந்தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மர்மநபர்கள் தனது காரை திருடி வெடிப்பொருட்களுடன் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார். இந்த சம்பவத்தில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் இருந்தனர்.

இந்தநிலையில் வெடிப்பொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கடந்த 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மர்ம நபர்கள் காரை திருடி வெடிப்பொருட்களுடன் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக ஹிரேன் மன்சுக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

என்.ஐ.ஏ. விசாரணை
இந்தநிலையில் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் மற்றும் ஹிரேன் மன்சுக் மரணத்தில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது.

மேலும் அவரை பணியிடைநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதேபோல ஹிரேன் மன்சுக்கின் மனைவியும் கணவரின் மரணத்தில் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து மாநில அரசு சச்சின் வாசேவை குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து பொதுமக்கள் குறைதீா்ப்பு மையத்திற்கு மாற்றியது.

இதற்கிடையே ஹிரேன் மன்சுக் மரணம் தொடர்பாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையை தொடங்கியது. இதற்கு முதல்-மந்திாி உத்தவ்தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

போலீஸ் அதிகாரி கைது
இந்தநிலையில் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்காக சச்சின் வாசே காலை 11.30 மணியளவில் தென்மும்பை கம்பாலா ஹில் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இரவு 11.30 மணியளவில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்தது. இது குறித்த தகவலை என்.ஐ.ஏ. செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான தகவல்களை பெற மும்பை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் நிதின் அலாக்னுரே, பயங்கரவாத தடுப்பு பிரிவு உதவி கமிஷன் ஷிாிபாத் காலேவிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தனர்.

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.