அரசியலிலிருந்து ஒதுங்கிய சசிகலா எம்.ஏ. படிப்புக்கான தேர்வை எழுதப்போகிறார்?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சசிகலா முடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி விடுதலையானார். அவர் தற்போது சென்னையில் தங்கியுள்ளார்.

அவர் சிறையில் இருந்தபோது கன்னடம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொண்டார். அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் எம்.ஏ. கன்னட படிக்க விண்ணப்பித்து இருந்தார்.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் மைலாரப்பா கூறுகையில்,

‘‘சசிகலாவுக்கு கன்னடம் கற்கும் ஆர்வம் இருந்தது. அதனால் நாங்கள் சிறைக்கு சென்று அவரை எம்.ஏ. படிப்பில் சேர்த்தோம். அவர் தேர்வு எழுத இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேர்வு நடத்த முடியவில்லை. தற்போது அந்த படிப்புக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 24-ந் தேதி தேர்வு தொடங்குகிறது. இதில் 257 கைதிகள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். ஆனால் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி சென்றுவிட்டார். தற்போது சென்னையில் இருக்கும் அவர் தேர்வு எழுத வருவது சந்தேகம் தான்’’ என்றார்.