ஏதோ உருவம் தெரியுர மாதிரி இருக்கே’!.. நள்ளிரவு ‘கூவம்’ ஆற்றில் வந்த சத்தம்.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!

சென்னை கூவம் ஆற்றில் நள்ளிரவு சிக்கிய பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுந்து காவல் ஆய்வாளராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கமாக இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல கடந்த 13-ம் தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் காவல் ஆய்வாளர் புகழேந்தி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது பனகல் மாளிகை வழியாக செல்லும் கூவம் ஆற்றில் ஏதோ சத்தம் வந்துள்ளது. மேலும் உருவம் அசைவதுபோல் தெரிந்ததால் காவல் ஆய்வாளர் புகழேந்தி உடனே அங்கே சென்று பார்த்துள்ளார்.

அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூவம் ஆற்றின் சகதியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் உடல் முழுவதும் சகதியில் சிக்கியிருந்ததால், அவர் மூச்சுவிட முடியாமல் உயிருக்கு போராடியுள்ளார். இதனைப் பார்த்த காவல் ஆய்வாளர் புகழேந்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அப்பெண்ணை காப்பாற்ற தனியாக யார் சென்றாலும் சகதியில் சிக்கும் நிலையில், தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திருக்காமல், அருகில் கிடந்த ஆஸ்பெட்டாஸ் ஓடு மற்றும் மரக்கட்டைகளை காவல் ஆய்வாளர் புகழேந்தி ஆற்றில் வீசியுள்ளார். பின் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதன் மீது நடந்து சென்று அப்பெண்ணை பத்திரமாக மீட்டுக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார்.

இதன்பின்னர் அப்பெண்ணை விசாரணை செய்ததில் அவர் மனம்நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண் கிண்டி நாகிரெட்டியாபட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது தாய் என்பது தெரியவந்துள்ளது.

உடனே ஆனந்தனுக்கு தகவல் கொடுத்து வரைவழைத்த போலீசார், அவரிடம் தாயாரை பத்திரமாக ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் தாயை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் புகழேந்திக்கு ஆனந்தனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நள்ளிரவு நேரத்தில் கூவம் ஆற்றில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட தகவலறிந்த, அடையாறு துணை ஆணையர் விக்ரமன் ஐபிஎஸ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் காவல் ஆய்வாளர் புகழேந்திக்கு பாராட்டு தெரிவித்தனர்.