கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி’!.. விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய ஒரு கேள்வி.. கணவனுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!

பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என கணவருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது கணவர் மீது வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயராக இருக்கும் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதனால் தனது குழந்தைகளுடன் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அப்பெண்ணின் கணவர் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என கேள்வி எழுப்பியது. அப்போது அவரது கணவர் மாதம் ரூ. 5.5 லட்சம் சம்பளம் வாங்குவதும், ஆனால் குழந்தைகளை கவனிக்காமல், தனியாக ஆடம்பரமாக வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு அப்பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்முறை வழக்கு தொடர்ந்திருந்ததும், 2019-ம் ஆண்டு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் தரவேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே கொடுத்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு அவர் பணம் எதுவும் கொடுக்காததால்தான் அந்த பெண் மீண்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதந்தோறும் ஜீவனாம்சமாக கணவரின் சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.