நீங்கள் நிம்மதியாகத் தூங்க வேண்டுமெனில்… – பைடனுக்கு கிம் ஜாங்கின் சகோதரி எச்சரிக்கை

வடகொரியாவுக்கு எதிரான செயல்பாடுகள், அமெரிக்காவுக்கு தூக்கத்தை இழக்கச் செய்யும் என ஜோ பைடனுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென்கொரியாவின் சியோலுக்கு பயணம் செய்தனர்.

பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் ஆகியோர் தமது முதல் வெளிநாட்டு பயணத்தில் திங்களன்று ஜப்பானுக்கு வந்தனர். இது ராணுவ கூட்டணிகளை சீனாவுக்கு எதிரான ஓர் அரணாக அணி திரட்டுவதையும், அணு ஆயுதமேந்திய வட கொரியாவிற்கு எதிராக ஓர் அணியை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக, புதிய அமெரிக்க அதிபரைப் பற்றிய வட கொரியாவின் முதல் வெளிப்படையான கருத்தினை, வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னின் முக்கிய ஆலோசகரான கிம் யோ ஜோங் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவும் தென் கொரியாவும் கடந்த வாரம் கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கின. இது தொடர்பாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கின் அதிகாரபூர்வ ரோடோங் சின்முன் செய்தித்தாள் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையை பரப்ப போராடும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஓர் அறிவுரை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், தொடக்கத்திலிருந்தே அதற்கான வேலையை உருவாக்காமல் இருப்பது நல்லது, அவ்வாறு செய்தால் அது உங்களின் தூக்கத்தை கெடுக்கும்” என்று கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முன்னதாக பைடனின் பதவியேற்புக்கு சற்று முன்னர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தனது நாட்டின் “முதன்மையான எதிரி” என்று அறிவித்தார், பியோங்யாங்கின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை ஒரு ராணுவ அணிவகுப்பில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.