இந்திய அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனின் திருமண புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக சஞ்சனா கணேசன் செய்திருந்த சில பழைய ட்வீட்களும் வைரலாகின. 28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப்பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
சஞ்சனா கணேசன் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக சஞ்சனா கணேசன் உள்ளார்.
அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொகுப்பாளராகவும் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு திருமணத்தில் முடிந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்கள் சிலரை மட்டுமே வைத்து திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது.
பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் இருவரும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இன்று, எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். எங்களுடைய திருமணம் மற்றும் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்’ என தனது திருமண புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு, கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ராவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.