ஜெய்பூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, சக பயணியான மருத்துவர் தலைமையில், விமான கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ள ஆச்சரியமூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெங்களுருவில் இருந்து இன்று அதிகாலை ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது தங்கள் பயணி ஒருவருக்கு பிரசவம் நடந்ததாகவும், அதில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரசவம் பார்த்த மருத்துவருக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு 6E 460 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதில் பயணித்த பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து, கேபின் குழு ஊழியர்களிடம் உதவி கோரினார். அதே நேரத்தில் அந்த விமானத்தில் பயணித்த மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன், மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இண்டிகோ
தக்க நேரத்தில் உதவி செய்த மருத்துவர் சுபகானா நசீருக்கு இண்டிகோ நிறுவனத்தார் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாராட்டு தெரிவித்தனர்.
Baby girl 👧🏻 born onboard @IndiGo6E flight 6E 469 from Bengaluru to Jaipur! Baby delivered with the help of IndiGo crew & Dr Subahana Nazir who was travelling on the flight. Dr Nazir was welcomed at Jaipur airport with a Thank You card later by IndiGo staff. #GoodNews pic.twitter.com/x1SRCcXnve
— Poulomi Saha (@PoulomiMSaha) March 17, 2021
இதனிடையே இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 6E 460 விமானத்தில் டிக்கெட் இல்லா பயணியும், அவரின் தாயும் நலமுடன் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் ஆண் குழந்தை நடுவானில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.