என் பொண்ணு, என் பொண்ணு’… ‘இந்த ரூம் தானே’… ‘சித்ராவின் கடைசி நிமிடங்கள்’… ‘கதறி அழுத தாய்’…

நடிகை சித்ரா கடைசியாகத் தங்கி இருந்த ஹோட்டல் அறையைப் பார்த்து அவரது தாய் கதறி அழுத வீடியோ காண்போரைக் கலங்கச் செய்துள்ளது.

சின்னதிரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எப்போதும் துருதுருவென இருக்கும் அவரது இழப்பை திரைத்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது கணவர் ஹேம்நாத் கொடுத்த மனஅழுத்தம் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் ஆரம்பம் முதலே தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சித்ரா மற்றும் ஹேம்நாத் தங்கியிருந்த ஹோட்டல் அறை காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் அது பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறையில் இருக்கும் பொருட்களை எடுத்து கொள்ள சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சித்ராவின் பெற்றோர், தங்கள் ஆசை மகள் கடைசியாகத் தங்கி இருந்த அந்த ஹோட்டல் அறைக்குச் சென்று சித்ரா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது துணிகளை எடுத்தனர்.

அப்போது அறைக்குள் சென்ற சித்ராவின் தாய், சித்ரா தற்கொலை செய்து கொண்ட மின்விசிறியை பார்த்ததும் கதறித் துடித்தார். அங்கிருந்த கட்டிலில் அழுது புரண்ட அவர், சித்ராவை நினைத்துக் கதறினார். அப்போது அந்த அறையில் ஒரு மது பாட்டில் மற்றும் சில காலி சிகரெட் பாக்கெட்கள் கிடந்தது.

அவற்றை எடுத்துப் பார்த்த சித்ராவின் தந்தை இது எல்லாம் ஹேம்நாத் தான் இங்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை எல்லாம் எப்படி இங்கு அனுமதித்தீர்கள் எனத் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தினார். தற்போது அந்த அறையில் எடுக்கப்பட்ட வீடியோ காண்போரைக் கலங்கச் செய்யும் வகையில் உள்ளது.