சொமாட்டோ ஊழியரை தாக்கிய ஹிடேஷா மீது 3 பிரிவுகளில் வழக்கு!

கடந்த 9-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஹிடேஷா சந்திரனி, சொமாட்டோ ஊழியர் காமராஜ் தன்னை தாக்கியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

இதையடுத்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த காமராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், “நான் காலதாமதமாக உணவு கொண்டு சென்றபோது ஹிடேஷா சந்திரனி தகாத முறையில் என்னை திட்டினார். உணவுக்கு பணம் தராமல் செருப்பால் என்னை தாக்கினார். ஆனால் ஹிடேஷா சந்திரனி என் மீது பொய் புகார் அளித்ததால் எனக்கு வேலைப் போய்விட்டது” என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் ஹிடேஷா தன்னை தாக்கியதாக எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, ஹிடேஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.