ஜெயசித்ரா, மகனைப் பத்திச் சொன்னா நம்ப மாட்டாங்க…- காப்பாற்ற முயன்ற குணசித்திர நடிகை!


நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான அம்ரிஷ், இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இந்த வழக்குத்தொடர்பாக மேலும் சில சினிமா பிரமுகர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று விசாரணையை முடுக்கியிருக்கிறது காவல் துறை என அதிர்வு இணையம் அறிகிறது.

நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர்களின் ஒரே மகன் அம்ரிஷ். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் சென்னை போயஸ் கார்டனில் வசித்துவருகிறார்கள். இப்போது அம்ரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிற இரிடியம் மோசடி வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் என்கிறார்கள்.

2010-ல் ஜெயசித்ரா இயக்க அம்ரிஷ் நடித்த படம் ‘நானே என்னுள் இல்லை’. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஷூட்டிங் ஹவுஸில் நடந்துள்ளது. அந்த ஷூட்டிங் ஹவுஸ் உரிமையாளர்தான் நெடுமாறன். அப்போதுதான் நெடுமாறனுடன் அம்ரிஷுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. நெடுமாறன் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். முன்னர் கருணாநிதியின் மகள் செல்வி மீது நில மோசடிப் புகார் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுமாறனிடம் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதை அதிக விலைக்கு விற்றுத் தருவதாகவும் சொல்லியே பணம் பெற்றுள்ளார் அம்ரிஷ். பணம் பெற்றுக் கொண்ட போது கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் நெடுமாறனை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு நிறுவனத்தைக் காட்டி அவர்களே பணம் தருவார்கள் எனச் சொல்லியிருக்கிறார். சுமார் 26 கோடி வரை அம்ரிஷிடம் கொடுத்த நெடுமாறனுக்கு ஆரம்பத்தில் சில பல லட்சங்கள் கிடைத்துடன் சரியாம். அதன்பிறகு பணமும் கிடைக்கவில்லை, அம்ரிஷ் தரப்பிலிருந்து சரியான பதிலும் இல்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நெடுமாறன், தனக்குத் தெரிந்த ஹீரோயினாக இருந்து குணச்சித்திர நடிகையாக மாறிய ‘இசை’ நடிகையிடம் சொல்லி, விஷயத்தை ஜெயசித்ரா கவனத்துக்குக் கொண்டு செல்ல முயன்றாராம். ஆனால் அந்த நடிகையோ, “பையனைப் பத்திச் சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க” என்றபடி, இன்னொரு முக்கிய சினிமாப் பிரமுகரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவரோ “இது மோசடி வழக்கு என்பதால் தலையிட விரும்பவில்லை” எனச் சொல்லி விட்டாராம்.

அதன்பிறகே காவல் துறைக்குச் சென்ற நெடுமாறன், தேர்தல் அறிவிப்பு வரும்வரை காத்திருந்திருக்கிறார். அதற்கு முன் புகார் செய்தால் ஜெயசித்ரா தன்னுடைய அரசியல் தொடர்புகளை வைத்து மகனைக் காப்பாற்றி விடுவார் என்றே தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வழக்கைத் துரிதப்படுத்த, தற்போது அம்ரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயசித்ராவின் வீட்டில் இதுதொடர்பான பிரச்னை போய்க் கொண்டிருந்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். அம்ரிஷின் சில சகவாசங்களால் அவருக்கும் அவரது மனைவிக்குமிடையே பிரச்னை உண்டாக அவர் தனியே சென்றுவிட்டாராம்.

காவல்துறையோ இந்த வழக்கில் மேலும் சில சினிமாக்காரர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. சினிமா வட்டாரத்திலுள்ள அம்ரிஷின் நட்பு வட்டம், ஒரு வருடத்துக்கு முன்பே இந்தப் பஞ்சாயத்தில் தலையிட்ட அந்த நடிகை ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.