கவர்ச்சிக் கன்னியுடன் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்: வைரல் போட்டோ

ஒரு நல்ல நாள் பார்த்து தன் கடை விளம்பர படத்தில் நடிக்கத் துவங்கிய லெஜண்ட் சரவணன் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். இந்த வயதில் லெஜண்ட் ஹீரோவா, யார் அவரை வைத்து படம் தயாரிக்கிறார்கள் என்று எல்லாம் கேட்கக் கூடாது. வயதானாலும் இன்னும் இளைஞர் போன்று இருக்கும் லெஜண்ட் தான் அவர் படத்தை தயாரிக்கிறார்.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தை ஜே.டி. மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகிறார்கள். லெஜண்ட் படத்திற்காக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அம்மணி நிச்சயம் பெரிய தொகை கேட்டிருப்பார். ஆனால் அதெல்லாம் அண்ணாச்சிக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.

லெஜண்ட் தற்போது ஊர்வசி ரவ்தெலா, விவேக் ஆகியோருடன் மணாலியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் அவர் ஊர்வசியின் கை கோர்த்து நடந்தது மற்றும் ஸ்டைலாக போஸ் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

லெஜண்டின் புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

லெஜண்ட் செம ஸ்டைலாக இருக்கிறார். அவர் ஹேர்ஸ்டைல் தான் கண்ணை பறிக்கிறது. லெஜண்டால் எப்படி செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்க முடிகிறது. ஊர்வசியுடன் ஊர்வலமா, நடத்துங்க லெஜண்ட்.

கிராபிக்ஸ் மூலம் லெஜண்ட் புகைப்படத்தை ஒட்டியது போன்று தெரிகிறதே ஏன்? என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஸ்டண்ட் காட்சியை படமாக்கியபோது லெஜண்ட் பலரை அடித்து நொறுக்கிய புகைப்படங்கள் வெளியாகின. லெஜண்ட் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரோபோ ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டார். லெஜண்ட் படத்தில் விவேக் இருக்கிறார் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக் லெஜண்ட் சரவணனும், ஹரி நாடாரும் தான். ஒரு பக்கம் லெஜண்ட் ஹீரோவாகிவிட்டார். மறுபக்கம் ஹரி நாடாரும் ஹீரோவாகி காதல் செய்து கொண்டிருக்கிறார். 2கே அழகானது காதல் என்கிற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார் ஹரி நாடார். அந்த படத்தின் ஹீரோயின் வனிதா விஜயகுமார் தான்.