இளைஞர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்’… ‘ரூ.50 ஆயிரம் கோடியில் முதல்வரின் மெகா பிளான்’… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சம்பத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், ”தமிழக மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியை தி.மு.க. கெடுக்கப் பார்க்கிறது. இந்த தேர்தல் என்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

இளைஞர்களுக்குப் பயன்படும் விதத்திலும் அவர்களின் வேலைவாய்ப்பினை பெருக்கும் விதமாகவும் கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் இந்த அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்த அரசு செயல்படவில்லை என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் எதையும் சிந்தித்துப் பேசுவதில்லை. இனி தமிழக மக்கள் அரசிடம் எந்த புகார் மனுவும் கொடுக்க வேண்டியதில்லை. 1100 போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறினாலே அந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.

கடலூர் நகரம் இனி வெள்ளத்தால் பாதிக்கப்படாது. தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி மின் தடையும் இங்கு ஏற்படாது” என முதல்வர் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.