மம்தா பானர்ஜியின் எரிச்சல்…. பாஜகவில் இணைந்ததன் காரணம் இது தான்; ரகசியம் உடைத்த நடிகர்!

மம்தா பானர்ஜியின் ஜெய் ஸ்ரீ ராம் எதிர்ப்பே நான் பாஜகவில் இணைய காரணம் என்று புகழ்பெற்ற ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் பகவான் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான டிவி தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மிகவும் பிரபலமான ஒரு தொடராக விளங்கியது. இதில் ராமராக நடித்து புகழ்பெற்ற நடிகர் அருண் கோவில், நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த நடிகர் அருண் கோவில், 1990களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய அருண் கோவில், மேற்குவங்க தேர்தலையொட்டி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

அருண் கோவிலுடன் ராமாயணம் தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்ஹலியா மற்றும் ராவணாக நடித்த அர்விந்த் திரிவேதி ஆகியோர் பாஜகவில் இணைந்து எம்.பியாக இருந்து வருகின்றனர்.

இருப்பினும் அருண் கோவில் தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் அவர் பாஜகவிற்காக பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தெரியவந்துள்ளது. பாஜகவில் இணைந்தது தொடர்பாக அருண் கோவில் கூறுகையில், “ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு மம்தா பானர்ஜி தெரிவித்த எதிர்ப்பே என்னை பாஜகவில் இணைய தூண்டியது. ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? அது வெறும் கோஷமல்ல. அது அரசியல் கோஷமும் கிடையாது. அது நம் வாழ்க்கை முறை. அது நம் கலாச்சாரத்தை பிரதிபகிக்கிறது.” என தெரிவித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாஜக ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை கையில் எடுத்தது. அந்தத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18-ல் பாஜக வென்றது. இது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

63 வயதாகும் அருண் கோவில் ராமாயணம் தொடர் தவிர்த்து ஹிந்தி, போஜ்பூரி, ஒடியா மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.