இங்க என்ன நடக்கிறது என்று பாருங்க; இது என்ன கொடுமை!

மராட்டியத்தில் கடந்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது முதல் இதுநாள் வரையில் ஏற்பட்ட தொற்று பாதிப்பில் இதுவே அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அதிகபட்சமாக 24 ஆயிரத்து 886 பேர் நோய் தொற்றல் பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதிப்பு அளவை முறியடித்து தற்போது ஒரே நாள் பாதிப்பு 26 ஆயிரத்தை நெருங்கி நிற்கிறது.

மாநிலத்தில் இதுவரை 23 லட்சத்து 96 ஆயிரத்து 340 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 லட்சத்து 75 ஆயிரத்து 565 பேர் குணமடைந்து உள்ளனர். மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 353 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் மேலும் 58 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மாநிலத்தில் 53 ஆயிரத்து 138 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் நோய் பாதித்தவர்களில் குணமானவர்கள் சதவீதம் 90.79 ஆக குறைந்து உள்ளது.

தலைநகர் மும்பையிலும் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று நகரில் புதிதாக 2 ஆயிரத்து 877 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அமராவதி, புனே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

மும்பையில் மக்கள் முகக்கவசம் இன்றி வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மராட்டியத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள், கூட்ட அரங்குகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து நேற்று அரசு உத்தரவிட்டது.

மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி, மும்பை மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முகக்கவசம் அணியாமல் செல்லும் பெண்ணைத் தடுத்த நகராட்சி ஊழியரை ஒரு பெண் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

மும்பை காண்டிவாலி பகுதியில் ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் ஏறினார். அந்தக் காட்சியைப் பார்த்த மாநகராட்சி ஊழியர் அந்தப் பெண்ணின் உடையைப் பிடித்து, “நில்லுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்” என்று கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து, மாநகராட்சி பெண் ஊழியரிடம், “என்னை எப்படித் தடுத்து நிறுத்தலாம், என்னைத் தொட்டுப் பேச உனக்கு என்ன துணிச்சல்” என்று கூறி நகராட்சி ஊழியரை முகத்திலும், தலையிலும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அந்த நகராட்சி ஊழியர், முகக்கவசம் அணியத்தானே கூறினேன்”என்று கூறியபோதும் அந்தப் பெண் அவரைத் தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது