நான் வந்திட்டேன் என்று சொல்லு, திரும்பி வந்திட்டேனென்று சொல்லு மாஸ்காட்டும் கமல்!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் முகாமிட்டு தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை 6.30 மணியளவில் காந்திபார்க் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். கமல்ஹாசன் அங்கு வந்த தகவல் தெரிந்ததும் பொதுமக்கள் அவரை நோக்கி சென்றனர். அவரின் அருகில் சென்று நலம் விசாரித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பதிலுக்கு அவர்களிடம் நலம் விசாரித்த அவர், தனக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் காந்திபார்க்கிற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த தனியார் டவுன் பஸ்சை கைகாட்டி நிறுத்தி, அதில் ஏறினார். கமல்ஹாசனை பார்த்ததும் பஸ்சில் இருந்தவர்கள் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தனர். இருக்கையில் அமர்ந்ததும், கண்டக்டரிடம் பணம் கொடுத்து, தனக்கும், தன்னுடன் வந்தவர்களுக்கும் டிக்கெட் எடுத்துக்கொண்டார்.

பூ மார்க்கெட் பகுதி வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கிய கமல் அங்குள்ள வியாபாரிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகள் அவருடன் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

அதன்பின்னர் அங்கிருந்து காரில் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு சென்று காபி குடித்தார். பின்னர் சிறிது நேரம் அங்குள்ள ஊழியர்களிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் கமல்ஹாசனிடம் சென்று நல்லா இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். பதிலுக்கு அவர், நான் நலம் நீங்கள் நலமா? என்று முதியவரிடம் விசாரித்தார்.

பின்னர் அந்த முதியவர், நான் உங்களின் தீவிர ரசிகன் என்றும் உங்கள் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பாடலாமா? என்றார். அதற்கு கமல்ஹாசன் பாடுங்கள் என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் சினிமா படத்தில் இடம் பெற்ற போற்றி பாரடி பெண்ணே என்ற பாடலை முதியவர் பாடினார். அதை கமல்ஹாசன் ரசித்து கேட்டார். அதன்பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கமல்ஹாசன் பூ மார்க்கெட்டில் ஓட்டு சேகரிக்க சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் அவர் சிக்கிக்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், எதிர்பாராதவிதமாக அவரது காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த காலில் தான் அவர் ஆபரேஷன் செய்திருந்தார். இதனால் அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டது.

வலி அதிகமானதால் அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். வலி சரியாகி விடும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கமல் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.

கமல்ஹாசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பின்போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக ஆபரேஷன் மூலம் காலில் பிளேட் பொருத்தியிருந்தார். அந்த பிளேட்டை சமீபத்தில் அகற்றி விட்டு சிறிது நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கட்சி பணிகளை வீட்டில் இருந்தவாறே மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று காலை 11 மணியளவில் சூலூர் மற்றும் பல்லடத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சூலூர் நாலு ரோட்டில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அவரது பேச்சை கேட்க காத்திருந்தனர். ஆனால் காலில் ஏற்பட்ட வலி காரணமாக சூலூர், பல்லடம் பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார்.

இந்த அறிவிப்பு அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளிடம் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பின்னர் இரவு கோவை சிங்காநல்லூரில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.