மதுபான விடுதி, ஓட்டல்களில் இருந்து உள்துறை மந்திரி மாதம் ரூ.100 கோடி வசூலிக்க கட்டாயப்படுத்தினார்; முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரபரப்பு கடிதம்!

வெடிகுண்டு கார் வழக்கு

மும்பையில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியில் 27 மாடி ஆடம்பர வீட்டின் அருகே கடந்த மாதம் வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு காரின் உரிமையாளர் என கூறப்பட்ட தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்டு கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.இதில் வெடிகுண்டு கார் வழக்கில் மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததை அடுத்து மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். கமிஷனருக்கு கீழ் பணியாற்றி போலீஸ் அதிகாரிகள் மன்னிக்க முடியாத தவறை செய்ததால் பரம்பீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.

ரூ.100 கோடி வசூல்
இந்தநிலையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு மராட்டிய அரசியலை புரட்டி போடும் அளவுக்கு வெடிகுண்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மூலமாக மும்பை போலீசாரை மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கூறினார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

என் பணியிட மாற்றத்தில் உடன்பாடு இல்லாத போதும் கடந்த 18-ந் தேதி ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பேற்று கொண்டேன். நான் மாநில போலீஸ் சட்டத்தின்படி நிர்வாக தேவைக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். வெடிகுண்டு கார் வழக்கின் விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவே நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன் என நம்பி இருந்தேன். வெடிகுண்டு கார் வழக்கை என்.ஐ.ஏ. மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரிக்க எல்லா உதவிகளையும் எனது அலுவலகம் அளித்தது.

இந்தநிலையில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கடந்த 18-ந் தேதி அளித்த பேட்டியில், வெடிகுண்டு கார் வழக்கு விசாரணையில் எனது அலுவலகம், மும்பை போலீசார் மிகப்பெரிய தவறை இழைத்து இருந்ததாக கூறியிருந்தார். மேலும் எனது தவறு மன்னிக்க முடியாதது எனவும், எனது பணியிடமாற்றம் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டது அல்ல எனவும் தெரிவித்து இருந்தார்.

முதல்-மந்திரியிடம் கூறினேன்
வெடிகுண்டு கார் சம்பவத்தை அடுத்து மார்ச் மாத மத்தியில் ஒருநாள் மாலை நான் வர்ஷா பங்களாவில் உங்களை (முதல்-மந்திரி) சந்தித்து அதுகுறித்து விளக்கினேன். அப்போது உள்துறை மந்திரி செய்யும் தவறான செயல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் உங்களிடம் தெரிவித்தேன். அதேபோல நான் துணை முதல்-மந்திரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் மூத்த மந்திரிகளிடமும் தவறான செயல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து கூறியிருந்தேன்.

இதில் நான் கூறியதில் சில விஷயங்கள் சில மந்திரிகளுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததையும் கவனித்தேன்.

ஓட்டலுக்கு ரூ.3 லட்சம்
கடந்த சில மாதங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டராக இருந்த சச்சின் வாசேவை உள்துறை மந்திரி பலமுறை அவரது தைனேஷ்வர் அரசு பங்களாவுக்கு அழைத்து இருக்கிறார். அவர் தொடர்ந்து உள்துறை மந்திரிக்கு நிதி திரட்ட உதவி செய்ய வலியுறுத்தப்பட்டார். பிப்ரவரி மாத மத்தியில் ஒருநாள் சச்சின் வாசேவை உள்துறை மந்திரி அவரது அரசு பங்களாவுக்கு அழைத்தார். அப்போது அங்கு மந்திரியின் முதன்மை செயலாளர் பாலன்டே மற்றும் 2 ஊழியர்கள் இருந்து உள்ளனர்.

அப்போது மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் சச்சின் வாசேவிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் மும்பையில் 1,750 மதுபான விடுதிகள் (பார்கள்) உள்ளன. ஒரு பாரில் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வசூலித்தாலே ரூ.40 முதல் 50 கோடி வசூலாகிவிடும் என மந்திரி, சச்சின் வாசேவிடம் கூறியிருக்கிறார். மீதமுள்ள தொகை பிற வழிகளில் வசூலிக்க முடியும் என மந்திரி தெரிவித்து உள்ளார்.

அதிர்ச்சி அடைந்தேன்
இதுகுறித்து சச்சின் வாசே எனது அலுவலகத்துக்கு வந்து தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என யோசித்தேன். இந்தநிலையில் சில நாட்களுக்கு பிறகு உள்துறை மந்திரி மும்பையில் உள்ள ஹூக்கா பார்லர்கள் குறித்து ஆலோசிக்க சமூக குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீலை அவரது அரசு பங்களாவுக்கு அழைத்தார். இந்த சந்திப்பில் மந்திரியின் தனி செயலாளர் பாலன்டேவும் இருந்து உள்ளார்.

பின்னர் துணை கமிஷனர் புஜ்பால் மற்றும் உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீலை உள்துறை மந்திரி அவரது பங்களாவுக்கு அழைத்து உள்ளார். அவர்கள் மந்திரியின் அறைக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். தனி செயலாளர் பாலன்டே மந்திரியை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்து இருக்கிறார். அப்போது அவர், மும்பையில் உள்ள 1,750 பார், ஓட்டல்களில் ரூ.40 முதல் 50 கோடி வசூலிக்க முடியும் என்பதால் அதை இலக்காக உள்துறை மந்திரி வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார். பணம் வசூலிக்க உள்துறை மந்திரி உத்தரவிட்டதை உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீல் எனக்கு தெரிவித்தார். அவர் கூறியதன்படி இந்த சந்திப்பு மார்ச் 4-ந் தேதி உள்துறை மந்திரியின் அலுவலகத்தில் நடந்து உள்ளது.

மந்திரி அதிருப்தி
இதுதொடர்பாக சச்சின் வாசேவும், சஞ்சய் பாட்டீலும் என்னை அணுகினர். உள்துறை மந்திரி இதுபோல எனது அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தல் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். உள்துறை மந்திரி எனது அதிகாரிகள் மற்றும் அவர்களது அலுவலக ஊழியர்களை என்னிடமோ, அல்லது எனக்கும் உயர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்காமல் அழைத்து இருக்கிறார். அவர் அதிகாரிகளுக்கு அலுவல் ரீதியான பணிகளுடன், நிதி பரிவர்த்தனை உள்ளிட்ட வசூலிக்கும் திட்டங்களையும் வழங்கி உள்ளார். இந்த ஊழல் தவறுகள் எனது அதிகாரிகள் மூலம் எனது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. தற்கொலை வழக்கிலும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார். அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதை அவரிடம் தெரிவித்து இருந்தேன். இதன் காரணமாக அவர் என் மீது அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் உள்துறை மந்திரி என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. இந்த விவகாரத்தில் நான் கூறிய உண்மை நிலவரத்தை பரிசீலித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெடிகுண்டு கார் வழக்கில் இருந்து தப்பிக்க முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மறுப்பு தெரிவித்து உள்ளார்.