ஒருதலைக் காதல் தகராறில் பயங்கரம்: 8 மாத கைக்குழந்தை வெட்டிக்கொலை, மதபோதகர்-மனைவியையும் வெட்டிய கார் டிரைவர்!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி தெற்கு மகிழடியில் வசிப்பவர் ரசூல்ராஜ் (வயது 58). கிறிஸ்தவ மத போதகர். இவருடைய மனைவி எப்சிபாய் (52). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.

முதல் 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். 3-வது மகள் ஏஞ்சல் கிப்ட், வக்கீலாக உள்ளார். இளைய மகள் ஏஞ்சல் பிளக்சி (23), கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

மூத்த மகள் ஏஞ்சல் நலதன் தன்னுடைய கணவர் ஆனந்த் செர்லினுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர்கள் 2 பேரும் அங்கு பணியாற்றுவதால், தங்களுடைய 8 மாத பெண் குழந்தை அக்‌ஷா குயின்ஷியை சொந்த ஊரில் உள்ள தாத்தா- பாட்டியான ரசூல்ராஜ்- எப்சிபாயிடம் கொடுத்து வளர்த்து வந்தனர்.

பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவசங்கரன் (25). வாடகை கார் டிரைவரான இவர், ஏஞ்சல் பிளக்சியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கரன், ரசூல்ராஜிடம் சென்று இளைய மகள் ஏஞ்சல் பிளக்சியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி பெண் கேட்டுள்ளார். இதற்கு ரசூல்ராஜ் மறுப்பு தெரிவித்தார். இதனால் ரசூல்ராஜ் மீது சிவசங்கரன் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ரசூல்ராஜ் தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக வெளியே புறப்பட்டு சென்றார். வீட்டில் எப்சிபாய், பேத்தி அக்‌ஷா குயின்சியுடன் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் ஏஞ்சல் கிப்டும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது சிவசங்கரன் அரிவாள், பெட்ரோல் கேனுடன் ரசூல்ராஜின் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எப்சிபாய், சிவசங்கரனை வெளியே செல்லுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவசங்கரன் அரிவாளால் எப்சிபாயை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி அடித்தவாறு, தூங்கி கொண்டிருந்த கைக்குழந்தை அக்‌ஷா குயின்ஷியை தூக்கி கொண்டு வெளியே ஓட முயன்றார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத சிவசங்கரன் அரிவாளால் எப்சிபாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது குழந்தை அக்‌ஷா குயின்ஷி மீதும் பலமாக அரிவாள் வெட்டு விழுந்தது.

இதற்கிடையே, நடைப்பயிற்சிக்கு சென்ற ரசூல்ராஜ் தனது வீட்டில் இருந்து குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டதால், உடனே அங்கு ஓடிச் சென்றார். அப்போது அங்கிருந்த சிவசங்கரன் அரிவாளால் ரசூல்ராஜையும் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ரசூல்ராஜின் குடும்பத்தினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

உடனே, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததால், சிவசங்கரன் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ரசூல்ராஜ், எப்சிபாய், குழந்தை அக்‌ஷா குயின்ஷி ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தை அக்‌ஷா குயின்ஷி பரிதாபமாக உயிரிழந்தாள். ரசூல்ராஜ், எப்சிபாய் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரசூல்ராஜின் குடும்பத்தினரை சிவசங்கர் அரிவாளால் வெட்டியபோது, ஏஞ்சல் கிப்ட் தனது அறையில் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர்.