பிரபு வீட்டில் ‘வேட்பாளர்’ குஷ்பூ: மொத்த குடும்பமும் திரண்டு வரவேற்பு கொடுத்தது !

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு பிரச்சாரத்திற்கு நடுவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகர் குஷ்பூ. தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடாந்து கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பிரச்சாரம் தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடும் குஷ்பூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கு சென்ற குஷ்பூ அவர்கள் குடும்பத்தினருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த நடிகர் திலகத்தின் புகைப்படம் அருகே நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபுக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ பல ஹிட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.