அடையாளம் தெரியாத கும்பலால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அஜய் லால்வானி என்ற பத்திரிகையாளர் அடையாளம் தெரியத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த அஜய் லால்வானி பத்திரிகையாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை சுக்குர் பகுதியிலுள்ள முடிதிருத்தும் கடையில் அவர் இருந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியில் சுட்டனர். இதில் அவருக்கு வயிறு மற்றும் கால் பகுதிகளில் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் மூன்று இடங்களில் குண்டு துளைத்துள்ளது. உடலில் இருந்து அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மார்ச் 18-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

அஜய் லால்வானி படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக பார்க்கப்படுகிறது. “ எங்களுடைய குடும்பத்தில் யாருடன் எந்தப்பிரச்னையும் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக என் மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என அவருடைய தந்தை திலீப் குமார் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையில் உள்ள இந்து உறுப்பினர் லால் சந்த் மாலி கண்டனம் தெரிவித்துள்ளார். ” சிந்து மாகாணத்தில் ஹிந்து பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது பாதுகாப்பு இல்லாதது போல் உணர செய்கிறது. அஜய் லால்வானி குடும்பத்துக்கு இரங்கலை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.