ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு உதவிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு இப்படியொரு நிலையா!

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு உதவியதாக கூறப்படும் ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளம்பெண்ணை பற்றி தெரியாது

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். மேலும் வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய நரேஷ்கவுடா, இளம்பெண்ணின் நண்பரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ரமேஷ் ஜார்கிகோளியிடம் 2 முறை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் இளம்பெண்ணை தனக்கு தெரியாது என்றும், அந்த ஆபாச வீடியோ போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று ரமேஷ் ஜார்கிகோளி பதில் அளித்துள்ளார். இதனால் ஆபாச வீடியோ விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்ல முடியாமல் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

போலீசார் சோதனை

இந்த நிலையில், ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணுடன் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபரும், கிரானைட் கற்கள் விற்பனையாளருமான சிவக்குமார் தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். ஆபாச வீடியோ வெளியான பின்பு இளம்பெண்ணுக்கு தேவையான பண உதவி, அவர் ஓரிருடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல தேவையான உதவிகளையும் சிவக்குமார் செய்து கொடுத்தது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
சிவக்குமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

அவரை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சிவக்குமாரின் வீட்டில் சிறப்பு விசாரணை குழு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதற்காக கோர்ட்டில் இருந்து போலீசார் முறையான அனுமதியை பெற்று சோதனை நடத்தி இருந்தனர்.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சோதனையின் போது சிவக்குமார் வீட்டில் இருந்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ் ஆகியவையும் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தெரிகிறது. அவரது வீட்டில் சிக்கிய சிம் கார்டுகளில் இருந்து இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் தலைமறைவாக உள்ள சிவக்குமார் பற்றி, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டு அறிந்து கொண்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்குமாறு குடும்பத்தினரிடம் போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையில், தங்களது மகள் கடத்தப்பட்டு இருப்பதாக கூறி பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்தில், அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அந்த வழக்கு பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது.

பெற்றோர் தலைமறைவு

இந்த நிலையில், ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் பதிவான கடத்தல் வழக்கும் சிறப்பு விசாரணை குழு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தார்கள். இதற்காக பெலகாவியில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோரும், சகோதரர்களும் தலைமறைவாகி விட்டார்கள்.

இதையடுத்து, அவர்கள் வசித்து வரும் வீட்டு உரிமையாளர், பெலகாவியில் வசிக்கும் இளம்பெண்ணின் உறவினர்களிடம், அவரது பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர். அதே நேரத்தில் மகளை காணவில்லை என்று புகார் கூறிவிட்டு பெற்றோர் தமைறைவாகி விட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதன் காரணமாக அவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

காதலன் வாக்குமூலம்

அதே நேரத்தில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் காதலனான பீதர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், நீதிபதி முன்னிலையில், சிறப்பு விசாரணை குழு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தாா். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 1-ந் தேதி நரேஷ்கவுடா, ஸ்ரவன் உள்ளிட்டோர் ஆர்.டி.நகரில் உள்ள ஓட்டலில் வைத்து என்னையும், காதலியுமான இளம்பெண்ணையும் சந்தித்து பேசினார்கள். எங்களை கோவாவுக்கு செல்லும்படி நரேஷ்கவுடா கூறினார். அதன்படி, கோவாவுக்கு சென்று 4 நாட்கள் தங்கி விட்டு பெங்களூருவுக்கு திரும்பினோம்.

அந்த சந்தர்ப்பத்தில் ஆபாச வீடியோ விவகாரம் பற்றி எனக்கு தெரியவந்தது. இதுபற்றி காதலியிடம் கேட்டேன். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. பின்னர் நரேஷ்கவுடாவுடன் காதலி ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். நான் பீதருக்கு சென்று விட்டேன். ஆபாச வீடியோ விவகாரத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நரேஷ் கவுடாவை ஒரு முறை தான் சந்தித்து பேசி இருந்தேன் என்று ஆகாஷ் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானில் இளம்பெண் தலைமறைவு

ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒருமாநிலத்திற்கு அவர் சென்று வருகிறார். சமீபத்தில் டெல்லியில் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். ஆனால் அங்கிருந்து அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. அவருடன் முன்னாள் பத்திரிகையாளர் நரேஷ்கவுடா, இளம்பெண்ணின் நண்பர் ஒருவர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.