நீங்கள் அமெரிக்காவிற்கு வால் பிடித்தது போதும்; மலேசியாவிற்கு ஆப்படித்த வடகொரியா!

மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக் கொண்டது.

இதனை ஏற்று முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா மலேசியாவுடனான தூதரக உறவுகளை முழுமையாக துண்டிப்பதாக நேற்று அறிவித்தது.‌

இந்த சூழலில் வடகொரியா நபரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசியா உடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று வடகொரியா தூதரக ஊழியர்கள் அனைவரும் மலேசியாவில் இருந்து வெளியேறினர்.‌

முன்னதாக, மலேசிய தலைநகா் கோலாலம்பூரின் புகா் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய தூதரகத்தில் அந் நாட்டின் தேசியக்கொடி மற்றும் குறியீடுகளை வடகொரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினா். பின்னா் அந்த அதிகாரிகளும், அவா்களுடைய குடும்பத்தினரும் இரண்டு பேருந்துகளில் விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.