ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் பயங்கர தீ; 10 கொரோனா நோயாளிகள் பரிதாப சாவு!

மும்பை பாண்டுப்பில் ‘டிரீம்ஸ்’ என்ற 4 மாடி வணிக வளாகம் உள்ளது. இதன் 4-வது மாடியில் ‘சன்ரைஸ்’ தனியார் ஆஸ்பத்திரி சார்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுமார் 76 நோயாளிகள் தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவை கடந்ததும் சிறிது நேரத்தில் வணிக வளாகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென 4-வது மாடியில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிக்கும் பரவியது.

அப்போது பல நோயாளிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். தீ விபத்தை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நோயாளிகளும் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி துடித்தனர்.

இதற்கிடையே தீயணைப்பு படையினர் 13 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு புறம் தீயணைப்பு பணியிலும், மற்றொரு புறம் மீட்பு பணியிலும் துரிதமாக ஈடுபட்டனர்.

ஆனாலும் தீ விபத்தில் 10 கொரோனா நோயாளிகள் உயிரை விட நேர்ந்தது. இதில் சிலர் உடல் கருகியும், மேலும் சிலர் மூச்சு திணறலிலும் உயிரிழந்தனர்.

இதற்கிடையே மீட்கப்பட்ட மற்ற நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மராட்டியத்தில் கடந்த ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு முதல் இடத்தில் உள்ளது. முதல் அலை பாதிப்பை தற்போதைய 2-வது அலை மிஞ்சி விட்டது. நேற்று முன்தினம் மராட்டியத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். தலைநகர் மும்பையில் மட்டும் அன்றைய பாதிப்பு 5 ஆயிரத்து 504 ஆக புதிய உச்சத்தை எட்டி இருந்தது.

நாள்தோறும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளும் நிரம்பிவழிகின்றன. அந்த வகையில் தீ விபத்துக்கு உள்ளான வணிக வளாக ஆஸ்பத்திரியிலும் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, இது கொரோனா சிகிச்சை அளிக்க தற்காலிகமாகஅனுமதி வழங்கப்பட்ட ஆஸ்பத்திரி என்று விளக்கம் அளித்தார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த அவர், தீ விபத்துக்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இந்த வணிக வளாகத்தில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 31-ந் தேதியுடன் அரசு அளித்த அனுமதி முடியும் நிலையில் கோர தீ கொரோனா நோயாளிகளின் உயிரை குடித்து விட்டது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நோயாளிகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மும்பை ஆஸ்பத்திரி தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிப்பதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் இரங்கல் செய்தி வெளியிட்டு தனது வேதனையை தெரிவித்தார்.

வணிக வளாக கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு, அதில் 10 நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.